Friday, 24 August 2012

தனி ஒரு மனிதனால் ஊழலை ஒழிக்க முடியுமா?

தனி ஒரு மனிதனால் ஊழலை ஒழிக்க முடியுமா?


இந்தியா ஊழல் அற்ற வல்லரசாக வேண்டும் என்று அன்னா ஹசாரே சாத்வீக முறையில் போராடினால் - அதை ஆதரிக்க விரும்புவோர் உடனே SMS மூலம் நண்பர்களுக்கு அந்த தகவலை FORWARD செய்து அனுப்பியதாலேயே தாம் ஏதோ ஊழலுக்கு எதிராக பெரிய இயக்கத்தில் ஈடுபட்டுள்ளதுபோல் நினைக்கும் இந்த காலகட்டத்தில்-

ஊழலுக்கு எதிராக ஒரு படிக்காத பெண்மணி நடத்திய ஒரு  சத்தமில்லா போராட்டம் என் நெஞ்சில் அலைமோதுகிறது.

நான் பணி செய்த போளூர் தொகுதியின் (திருவண்ணாமலை மாவட்டம்) அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் எங்கள் ஆலைக்கு கரும்பு பதிவு செய்து அனுப்பிகொண்டிருந்தார். (அவர் மாவட்டசெயலாளராகவும் இருந்து தற்போது காலமாகி விட்டார்.)
அவர் அரசியலில் ரொம்ப பிஸி என்பதால் அவரது படிக்காத மனைவியே முழு விவசாயத்தையும் நிர்வகித்துகொண்டிருந்தார்.

அவர்கள் தமது சொந்த ஊரில் வீடு கட்ட ஆரம்பித்திருந்தனர். அந்த கட்டிட வேலை வருடகணக்கில் தாமதமாக நடந்துகொண்டிருந்தது.
ஆர்வமிகுதியால் நான் " ஏனம்மா வீட்டு வேலை தாமதமாகிறது?" என்று கேட்டேன்.

"போதிய பணம் இல்லாமல் வேலை தள்ளி போகிறது" என்றார் அந்த பெண்மணி.
"என்னம்மா ஆச்சர்யமாக உள்ளது? சட்டமன்ற உறுப்பினரே பணத்திற்காக தடுமாறினால் சாமான்யர்கள் எப்படி வீடு கட்டுவதை நினைத்துப்பார்க்க  முடியும்? " என்று கேள்வியால் தொடர்ந்தேன்.

அப்போது அவர் சொன்ன பதில்தான் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
" அய்யா, என் கணவர் அரசியலில் இருப்பதால் அவர் மூலம் வரும் பணத்திலிருந்து ஒரு பைசா கூட இந்த வீட்டுக்காக பயன்படக்கூடாது என்று என் கணவரிடம் சொல்லிவிட்டேன். அவர் எவ்வளவோ சொல்லிபார்த்தும் நான் கேட்காமல் இந்த கரும்பு விவசாயத்திலிருந்து வரும் பணத்தைக்கொண்டேமூன்று வருடமாக சிறுக சிறுக  கட்டி வருகின்றேன். அதில் தான் எனக்கு மனநிறைவும் நிம்மதியும் என்று கூறிவிட்டதால் என் கணவர் என் போக்கில் விட்டு விட்டார்" என்று முடித்தார்.

இப்போது சொல்லுங்கள் -இப்படி அன்புக்குரியவர்கள் விரும்பாதபோது அந்த MLA  வுக்கு அதிகமா சம்பாதிக்க எப்படி மனம் வரும்?

காமராஜ்,வாஜ்பாய், அப்துல்கலாம் எல்லாம்   ஊழலுக்கு அப்பாற்பட்டு இருந்ததற்கு / இருப்பதற்கு இதுவே அடிப்படை காரணமாக இருக்க முடியும்.

நான், மனைவியரால் கணவர் தூண்டப்படுகிறார் என்று மட்டும் கூறவில்லை.  ஒரு பெண் அரசியல் வாதியின் கணவரோ, பிள்ளைகளோ நேர்மைக்கு மாறாக கிடைக்கும் பணத்தால் கிடைக்கும் சுகத்தை விரும்பாவிடில்/  பொருட்படுத்தாவிடில் அந்த பெண் அரசியல் வாதிக்கு மட்டும் ஊழல் செய்ய எப்படி மனம் வரும்?

தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால் சிறை சாலைகள் தேவையில்லை -என்ற பாடலில் ஒரு திருத்தம்.
தனி ஒருவனின் அன்புக்குரியோர் விரும்பாவிட்டால் எந்த தவறுமே நடக்க வாய்ப்பில்லை.

மனைவி கணவரையோ அல்லது கணவர் மனைவியையோ -நீங்கள் எப்படியாவது சம்பாதியுங்கள்-எங்களுக்கு வசதியான வாழ்க்கை மட்டுமே குறிக்கோள் என்று விரட்டிக் கொண்டிருக்கும் வரை ஊழல் ஒரு அங்கீகாரம் பெற்ற சம்பாதிக்கும் வழியாகவே தொடரும்.

ஊழலை தடுக்க தனி மனிதனால் என்ன செய்து விட முடியும் என்று அங்கலாய்ப்பவர்கள் மத்தியில்-
எந்த ஆரவாரமும் இல்லாமல் ஊழலை தடுக்க தனி ஆவர்த்தனம் செய்த அந்த படிக்காத பெண்மணிக்கு

மீண்டும் ஒரு SALUTE !.

 

No comments:

Post a Comment