Friday, 24 August 2012

தனி ஒரு மனிதனால் ஊழலை ஒழிக்க முடியுமா?

தனி ஒரு மனிதனால் ஊழலை ஒழிக்க முடியுமா?


இந்தியா ஊழல் அற்ற வல்லரசாக வேண்டும் என்று அன்னா ஹசாரே சாத்வீக முறையில் போராடினால் - அதை ஆதரிக்க விரும்புவோர் உடனே SMS மூலம் நண்பர்களுக்கு அந்த தகவலை FORWARD செய்து அனுப்பியதாலேயே தாம் ஏதோ ஊழலுக்கு எதிராக பெரிய இயக்கத்தில் ஈடுபட்டுள்ளதுபோல் நினைக்கும் இந்த காலகட்டத்தில்-

ஊழலுக்கு எதிராக ஒரு படிக்காத பெண்மணி நடத்திய ஒரு  சத்தமில்லா போராட்டம் என் நெஞ்சில் அலைமோதுகிறது.

நான் பணி செய்த போளூர் தொகுதியின் (திருவண்ணாமலை மாவட்டம்) அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் எங்கள் ஆலைக்கு கரும்பு பதிவு செய்து அனுப்பிகொண்டிருந்தார். (அவர் மாவட்டசெயலாளராகவும் இருந்து தற்போது காலமாகி விட்டார்.)
அவர் அரசியலில் ரொம்ப பிஸி என்பதால் அவரது படிக்காத மனைவியே முழு விவசாயத்தையும் நிர்வகித்துகொண்டிருந்தார்.

அவர்கள் தமது சொந்த ஊரில் வீடு கட்ட ஆரம்பித்திருந்தனர். அந்த கட்டிட வேலை வருடகணக்கில் தாமதமாக நடந்துகொண்டிருந்தது.
ஆர்வமிகுதியால் நான் " ஏனம்மா வீட்டு வேலை தாமதமாகிறது?" என்று கேட்டேன்.

"போதிய பணம் இல்லாமல் வேலை தள்ளி போகிறது" என்றார் அந்த பெண்மணி.
"என்னம்மா ஆச்சர்யமாக உள்ளது? சட்டமன்ற உறுப்பினரே பணத்திற்காக தடுமாறினால் சாமான்யர்கள் எப்படி வீடு கட்டுவதை நினைத்துப்பார்க்க  முடியும்? " என்று கேள்வியால் தொடர்ந்தேன்.

அப்போது அவர் சொன்ன பதில்தான் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
" அய்யா, என் கணவர் அரசியலில் இருப்பதால் அவர் மூலம் வரும் பணத்திலிருந்து ஒரு பைசா கூட இந்த வீட்டுக்காக பயன்படக்கூடாது என்று என் கணவரிடம் சொல்லிவிட்டேன். அவர் எவ்வளவோ சொல்லிபார்த்தும் நான் கேட்காமல் இந்த கரும்பு விவசாயத்திலிருந்து வரும் பணத்தைக்கொண்டேமூன்று வருடமாக சிறுக சிறுக  கட்டி வருகின்றேன். அதில் தான் எனக்கு மனநிறைவும் நிம்மதியும் என்று கூறிவிட்டதால் என் கணவர் என் போக்கில் விட்டு விட்டார்" என்று முடித்தார்.

இப்போது சொல்லுங்கள் -இப்படி அன்புக்குரியவர்கள் விரும்பாதபோது அந்த MLA  வுக்கு அதிகமா சம்பாதிக்க எப்படி மனம் வரும்?

காமராஜ்,வாஜ்பாய், அப்துல்கலாம் எல்லாம்   ஊழலுக்கு அப்பாற்பட்டு இருந்ததற்கு / இருப்பதற்கு இதுவே அடிப்படை காரணமாக இருக்க முடியும்.

நான், மனைவியரால் கணவர் தூண்டப்படுகிறார் என்று மட்டும் கூறவில்லை.  ஒரு பெண் அரசியல் வாதியின் கணவரோ, பிள்ளைகளோ நேர்மைக்கு மாறாக கிடைக்கும் பணத்தால் கிடைக்கும் சுகத்தை விரும்பாவிடில்/  பொருட்படுத்தாவிடில் அந்த பெண் அரசியல் வாதிக்கு மட்டும் ஊழல் செய்ய எப்படி மனம் வரும்?

தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால் சிறை சாலைகள் தேவையில்லை -என்ற பாடலில் ஒரு திருத்தம்.
தனி ஒருவனின் அன்புக்குரியோர் விரும்பாவிட்டால் எந்த தவறுமே நடக்க வாய்ப்பில்லை.

மனைவி கணவரையோ அல்லது கணவர் மனைவியையோ -நீங்கள் எப்படியாவது சம்பாதியுங்கள்-எங்களுக்கு வசதியான வாழ்க்கை மட்டுமே குறிக்கோள் என்று விரட்டிக் கொண்டிருக்கும் வரை ஊழல் ஒரு அங்கீகாரம் பெற்ற சம்பாதிக்கும் வழியாகவே தொடரும்.

ஊழலை தடுக்க தனி மனிதனால் என்ன செய்து விட முடியும் என்று அங்கலாய்ப்பவர்கள் மத்தியில்-
எந்த ஆரவாரமும் இல்லாமல் ஊழலை தடுக்க தனி ஆவர்த்தனம் செய்த அந்த படிக்காத பெண்மணிக்கு

மீண்டும் ஒரு SALUTE !.

 

Sunday, 8 April 2012

முதல் நினைவு

 

" உன்னால் மட்டும் எப்படி இத்தனை ஆண்டுகள் கடந்தும் மென்மையாக இருக்க முடிகிறது " 

----- இது குமரன் Face book இல் என்னைப்பற்றி அடித்த கமெண்ட். 

"' அண்ணா!  இன்னுமா இந்த உலகம் உங்களை மென்மையானவர் என்று நம்புகிறது?"

------ இது எனது இளவல் (இளவரசு) அடித்த அடுத்த கமெண்ட் 

இதற்கு என்ன பதில் இருக்க முடியும்  என்று யோசித்ததில்,


 இங்கே நிரந்தரமாக மென்மையாகவும் வன்மையாகவும் யாருமே இருக்க முடியாது .

எல்லோருமே உள்ளத்தில் மென்மையானவரே!   தம்மை வெளிப்ப்படுதுவதில்தான் வேறுபடுகின்றனர் என்பது என் கருத்து.

அவர்கள் செய்யும் வேலையின் தன்மை, சூழ்நிலை , கீழே பணிபுரிவோரின் சுபாவம் போன்றவற்றை அனுதினமும் வெற்றிகரமாக எதிர்கொள்ளவே  தம்மைச்சுற்றி பல்வேறு வேலி அடுக்குகளை அமைத்துக்கொள்கின்றனர் என்பதே சரியாக இருக்கும்.

 "அவள் ஒரு தொடர்கதை " சுஜாதா நடித்த கேரக்டர் போல! 

 இது தொடர்பான ஒரு பசுமையான நினைவை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

அது 1990 ஆம் வருடம் -மே மாதம் மதுரை கல்லூரியின் நிறைவு நாள்!

ஆம்!  மூன்றாண்டுகளாக கூட்டு குடியும் கடைசி ஆண்டு தனிக்குடித்தனம் செய்ய பழகி விட்ட  விடுதியை விட்டு காலி செய்து விட்டு சொந்த ஊர் நோக்கி பயணிக்க வேண்டிய நாள்!

அகர வரிசைப்படி முதல் அறையில்(அறை எண் 39) இருந்த நான் எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டு மற்ற அறை நண்பர்களைப் பார்த்து சொல்லிவிட்டு வரலாம் என 40 ஆம் அறைக்குள் நுழைந்தேன். 

அசோகன் கண்கலங்கி இருந்தார். அவரை அழைத்துக்கொண்டு வரிசையாக ஜெராகி, ஜெயசங்கர், கிருஷ்ணன், குழந்தைவேல் ஆகியோரின் அறைக்கு சென்று சொல்லப்போனோம்! 

எதிர்பார்த்த இறுக்கமான முகங்களையே எதிர்கொண்டோம். 

இதற்கு முன்பாகவே வழக்கமான 

-பிரிவு உபசார நிகழ்ச்சிகள்!

-பசுமை நிறைந்த நினைவுகளே பாடல்கள்!

-நான்காண்டுகளாக பழகாதவர்களிடமும், பேசாதவர்களிடமும் உதட்டோர புன்னகை பரிமாற்றங்கள் !

-அனைவரிடமும் வாங்கிய முகவரியுடன் சிலவரிகள் !

போன்ற சம்பிரதாயங்கள் முடிந்து விட்டதால் 

அன்று யாரும் அதிகம் உணர்ச்சி வசப்படவில்லை.

மற்றவர்களாவது கண் கலங்கினார்கள்.                                                                   எனக்கோ அன்று துளி அளவு கண்ணீரும்  வரவில்லை!

ஆனால் நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று நடந்தது.

குழந்தை அறையை விட்டு குமார் அறைக்குள் நுழைய முற்பட்டோம்.

இறுக்கமான சூழ்நிலையை குமார் தமது வழக்கமான கடிகளால் மாற்றுவார் என்று எதிபார்த்த எங்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி!

எங்களைப்பார்த்த குமார் கேவிக் கேவி அழ  ஆரம்பித்துவிட்டார். அவரின் அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

(அதுவரை குமார் கலங்கி யாரும் பார்த்ததில்லை. குமார்தான் மற்றவர்களை கதிகலங்க வைப்பார் தமது எத்தல் பேச்சுகளால். ( ஒரு வாரத்துக்கு முன் தமிழ்நாடு ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்று அல்லிராணியை ஒரு கமெண்ட் சொல்லி பேச அழைக்க அதை சீரியஸ் ஆக எடுத்க்கொண்ட அல்லிராணி கண்கலங்கியதை யார்தான் மறக்க முடியும்?)


இதை அடுத்து மகேந்திரன், முருகேசன், முத்துகுமரன், கிரி, சாசு, செந்தில்,சுதாகர், செல்வா அறை என்று வரிசையாக சென்றபோதும இயல்பான  

சோகம் ததும்பிய முகங்களை மட்டுமே சந்தித்தோம்.

திருமாவளவன் அறைக்குள் நுழைகையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஓடி வந்து எங்களை கட்டிக்கொண்டு குமுறி அழ ஆரம்பித்துவிட்டார்.

(எதையுமே சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளாதவர்! கிண்டலும் கேலியுமாகவே அவரது பேச்சுகள் இருக்கும். அவர் கலங்குவார் என ஒருவருமே எதிர்பார்கவில்லை.)

இவர்கள் இத்தனை ஆண்டுகள் எங்கே வைத்திருந்தினர் இந்த மென் குணத்தை !

இவ்வளவு அன்பை உள்ளுக்குள் வைத்துகொண்டா இருந்தனர் ?

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் " என்ற குறள்தான் நினைவுக்கு வந்தது.

இவர்களா வன்மையானவர்கள் ?

மாறாக துளி கூட கண்கலங்காத கல்லுளி மங்கன் போல் இருந்த நான் தானே வன்மையாக காட்டிக்கொண்டேன்?

திருநெல்வேலி பேருந்தில் அசோகன்,முருகேசன் , முத்துக்குமார் அமர்ந்திருக்க நானும் செல்வாவும்  கீழே நின்றுகொண்டு வழி அனுப்புகையில் , என்னை தவிர நால்வருமே அழுததை நினைகையில் ஏன் எனக்கு மட்டும் அன்று அழுகையே வரவில்லை என்பது இன்று வரை எனக்கு புரியாத  புதிர் !


இப்போது கூறுங்கள் 

யார் மென்மையானவர் ? யார் வன்மையானவர்?


உண்மை ! அன்பான உறவினர்களிடமும் ஆத்மார்த்தமான நண்பர்களிடமும் பழகும்போதும் எல்லோரும் மென்மையானவரே!


உங்கள் அன்பன், 


க .அரசு 


குறிப்பு:  இது யாரையும் காயப்ப் படுத்துவதற்க்கோ , குறை சொல்லவோ எழுதப்படவில்லை ! அனைவரிடமும் உள்ள மனித நேயத்தை உணர்த்தவே எழுதப்பட்டது. குறை இருந்தால் பொறுத்துக்கொள்க !